Wednesday, December 14, 2011

Wednesday, November 30, 2011

அல்அய்னில் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி

அல்அய்ன் மண்டல தமுமுக சார்பில் மாதாந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி 25.11.2011 அன்று கத்தாரா கிளிண்கோ கேம்ப் பள்ளிவாசலில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அமீரக தமுமுக துணைச் செயலாளர் டாக்டர் அப்துல் காதர் தலைமை தாங்கினார். கத்தாரா கிளை தமுமுக தலைவர் காட்டுமன்னார்குடி அஸ்கர் அலி திருக்குர்ஆன் ஓதினார். 

ஷார்ஜாவிலிருந்து வந்திருந்த இஸ்லாமிய அழைப்பாளர் நாசர் அலி கான் ‘அர்ஷின் நிழலில்’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். பின்னர் மார்க்கம் தொடர்பான சகோதரர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

இரத்த தானம் செய்ய வேண்டும் என்பதை ஆர்வமூட்டும் வகையில் அல்அய்ன் ஜிம்மி மருத்துவமனையில் பணிபுரியும் தமிழகத்தை சேர்ந்த சகோதரர் டாக்டர் பீர்முஹம்மது  ரத்த தானம் செய்வதன் அவசியம் குறித்து விளக்க உரையாற்றினார். பின்னர் இரத்த தானம் செய்வது தொடர்பான சகோதரர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். இறுதியாக அல்அய்ன் மண்டல தமுமுக துணைச் செயலாளர் வடகால் எஸ்.புர்ஹானுதீன் நன்றியுரை ஆற்றினார்.

மகாம், ஜிமி, செனையா, மசியாத் மற்றும் கத்தாரா உள்ளிட்ட அல்அய்ன் நகரின் பல்வேறு பகுதிகளிலிருந்து சகோதரர்கள் பெரும்திரளாக கலந்து கொண்டனர்.

Sunday, November 27, 2011

த.மு.மு.க செயற்குழு - இராமநாதபுரம் மாவட்டம்

இராமநாதபுரம் மாவட்ட த.மு.மு.க செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் எஸ்.சலிமுல்லாகான் தலைமையில் மஸ்ஜித் தக்வா பள்ளியில் நடைபெற்றது.


Thursday, October 27, 2011

வாக்காளராக சேர இன்னொரு வாய்ப்பு

வாக்காளராக சேர இன்னொரு வாய்ப்பு

வாக்காளராக சேர இன்னொரு வாய்ப்பு கிடைத்துள்ளது. அடுத் தாண்டு ஜனவரி 1ம் தேதி 18 வயது நிரம்புகின்ற வாக்காளர் களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் வகையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தப் பணிகள் துவங்கு கிறது. இதனையொட்டி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப் பட்டுள்ளது.

வருவாய் கோட்டாட்சியர், நகராட்சி ஆணையர், தாசில் தார் அலுவலகங்கள், அனைத்து வாக்குச்சாவடி அமைவிடங்களி லும் வரைவு பட்டியல் பார்வைக்கு வைக்கப்படும்.

பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய மனுக்களை வரும் நவம்பர் 8ம் தேதி வரை அளிக்கலாம். மேலும் மனுக்களை பெற வரும் அக்டோபர் 30ம் தேதி, நவம்பர் 6ம் தேதி ஞாயிற்றுகிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது.

மேலும் வரும் 29ம் தேதி மற்றும் நவம்பர் 1ம் தேதி ஆகிய நாட்களில் கிராமசபை கூட்டங்கள் நடத்தப்பட்டு வாக்காளர் பட்டியலில் தொடர்புடைய பாகம், பிரிவு ஆகியன படிக்கப்பட்டு பெயர்கள் சரிபார்க்கப்படும். வெளிநாட்டில் வசிக்கின்ற இந்திய குடிமக்கள் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்க சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அதிகாரியிடம் படிவம் 6ஏ நேரில் அளிக்கப்பட வேண்டும். அல்லது வாக்காளர் பதிவு அதிகாரிக்கு தபாலிலும் படிவத்தை அனுப்பலாம்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஒரு வாய்ப்பு

சென்னையில்: சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரியும், சென்னை மாநகராட்சி ஆணைய ருமான தா.கார்த்திகேயன் நேற்று வெளியிட்ட அறிக்கை: கடந்த பொதுத் தேர்தலின்போது சென்னை மொத்த வாக்காளர்கள் 31,71,856 பேர். இவர்களில் ஆண்கள் 15,90,289 பேர். பெண்கள் 15,80,923 பேர். இதர இனம் 374 பேர். கடந்த மார்ச் மாதம் 26ம் தேதி முதல் 9,117 ஆண்கள், 8,960 பெண்கள், இதர இனத்தினர் 7 பேர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டனர். பட்டியலில் இருந்து 170 ஆண்களும், 152 பெண்களும் நீக்கப்பட்டனர். இறுதியாக 15,99,236 ஆண்கள், 15,89,731 பெண்கள், 381 இதர இனம் என மொத்தம் 31,89,348 பேர் இடம் பெற்றுள்ளனர்.

பட்டியலில் சேர்க்க, திருத்த, நீக்க 8ம் தேதிக்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்கப்படாது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் 30ம் தேதி, நவம்பர் 6ம் தேதி ஞாயிற்று கிழமையும் நடைபெறும். இந்த நடவடிக்கைகள் முடிந்த பிறகு இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த ஆண்டு ஜனவரி 5ம் தேதி வெளியிடப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

என்ன படிவம் தேவை?

வாக்காளர் பட்டியலில் முதன் முறையாக பெயர் சேர்க்க படிவம் எண் 6, வெளிநாட்டில் வசிக்கும் இந்திய குடிமக்கள் பெயர் சேர்க்க படிவம் 6 ஏ, ஒரு சட்டமன்ற தொகுதிக்கு உள்ளேயே மாறியிருந்தால் படிவம் 8 ஏ, பெயரை நீக்க படிவம் 7, பெயர், வயது, பாலினம், உறவு முறை முதலிய பதிவுகளில் திருத்தம் அல்லது சரியான உருவப்படம் இடம் பெறச் செய்ய படிவம் 8ல் விண்ணப்பிக்க வேண்டும்.

படிவங்களை தேர்தல் ஆணைய இணையதளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்கள் மீது வாக்காளர் பதிவு அதிகாரி ஆணை பிறப்பிக்கும் முன்னர் வாக்குசாவடி நிலை அலுவலர் மூலம் வீடு வீடாகச் சென்று விண்ணப்பம் மீது விசாரணை நடத்தப்படும். அதன் பின்னரே பெயர் பட்டியலில் சேர்க்கப்படும்.

Wednesday, October 19, 2011

ஜமாஅத் தொழுகையை அலட்சியம் செய்வோரின் நிலை!

குர்ஆன், ஹதீஸ் என்று பேசும் நம்மில் பலர் பள்ளிவாசலுக்கு சென்று ஜமாஅத்தாக தொழுவதில் அலட்சிம் காட்டுகின்றனர். ஜமாஅத்தாக தொழுவதின் முக்கியத்துவத்தையும் அதை தவற விடுவதால் ஏற்படும் நஷ்டங்களைப் பற்றிய நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கைகள் நிறைய இருக்கின்றன.




ஜமாத்அத் தொழுகைகளை விடுபவர்களுக்கான நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கைகள்: -

“ஸுப்ஹு, இஷா ஆகிய தொழுகைகளை விட முனாஃபிக் (வேடதாரி)களுக்குப் பாரமான தொழுகை வேறு எதுவும் இல்லை. அந்த இரண்டு தொழுகைகளையும் (ஜமாஅத்தாகத்) தொழுவதிலுள்ள நன்மையை மக்கள் அறிவார்களானால் தவழ்ந்தாவது அத்தொழுகைக்கு வந்து சேர்ந்து விடுவார்கள். இகாமத் சொல்லுமாறு முஅத்தினுக்கு நான் கட்டளையிட்டுப் பின்னர் ஒருவரை இமாமாக நின்று தொழுகை நடத்துமாறு கூறி, அதன் பின்பு எவரேனும் தொழுகைக்கு வராமல் இருந்தால் அவர்களைத் தீயிட்டுக் கொளுத்த நான் நினைத்தேன்.” என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

கண்பார்வையற்றவருக்கே வீட்டில் தொழ அனுமதியில்லை: -

கண்பார்வையற்ற ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! என்னை பள்ளிக்கு அழைத்து வருபவர் யாருமில்லை. எனவே வீட்டிலேயே தொழுவதற்கு அனுமதிக்குமாறு வேண்டினார். நபி (ஸல்) அவர்கள் அவருக்கு அனுமதி வழங்கி, அவர் சென்று கொண்டிருக்கும் போது அவரை அவர்கள் அழைத்து தொழுகைக்காக பாங்கு சொல்லப்படுவதை நீர் கேட்கிறீரா? என்றனர். அதற்கவர் ஆம் என்றதும் அந்த அழைப்புக்கு நீ (ஜமாஅத்துக்கு வருவதன் மூலம்) பதிலளிப்பீராக! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), முஸ்லிம்.

இயலாதவரைக் கூட கைத்தாங்கலாக பள்ளிக்கு அழைத்துவரவேண்டும்: -

ஜமாஅத்தில் கலந்து கொள்ளாது தன் வீட்டில் தொழுபவரைப் போல நீங்களும் உங்கள் வீடுகளில் தொழுவீர்களானால் உங்கள் நபியின் வழிமுறையை கைவிட்டவர்களாவீர்கள். உங்கள் நபியின் வழிமுறையை நீங்கள் கைவிட்டீர்களானால் நிச்சயம் வழிதவறிப் போவீர்கள். எவர் உளூச் செய்து – அதை நல்ல முறையில் செய்து இப் பள்ளிகளில் ஏதேனும் ஒன்றை நாடி வருகிறாரோ அல்லாஹ் அவருக்கு – அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு எட்டுக்கும் பதிலாக ஒரு நன்மையை எழுதி, ஒரு பதவியை உயர்த்துகிறான். மேலும் ஒரு தீமையை அவரை விட்டும் அகற்றுகிறான். மேலும் ஒரு தீமையை அவரை விட்டும் அகற்றுகிறான். எங்களிடையே நான் பார்த்திருக்கிறேன் பகிரங்கமான சந்தர்ப்பவாதிகளைத் தவிர வேறெவரும் ஜமாஅத்துக்கு வராமல் இருக்க மாட்டார். திண்ணமாக இயலாதவரைக் கூட இரண்டு பேர் கைத்தாங்கலாக அழைத்து வந்து வரிசையில் நிறுத்தப்படும் என்று இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஆதாரம் :முஸ்லிம்.

ஜமாஅத்தை விட்டு தனியாக தொழுபவர் ஷைத்தானின் பிடியில் எளிதில் அகப்பட்டுவிடுவார்: -


‘ஒரு பேரூரில் அல்லது சிற்றூரில் முஸ்லிம்களில் மூவர் மட்டுமே வாழ்ந்து, அங்கு ஜமாஅத்துடன் தொழுகை நிறைவேற்றப்படவில்லையானால் அவர்கள் மீது ஷைத்தான் ஆதிக்கம் பெற்றுவிடுகிறான். எனவே ஜமாஅத்துடன் தொழுவதை இன்றியமையாததெனக் கொள்! ஏனென்றால், இடையனை விட்டும், மந்தையை விட்டும் விலகிச் செல்லும் ஆட்டையே ஓநாய் (எளிதில்) வேட்டையாடுகிறது’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள். அறிவிப்பவர் : அபுத் தர்தா (ரலி), ஆதாரம் : அபூதாவூது.

ஜமாஅத் தொழுகையை விடுவது முனாஃபிக் (நயவஞ்சகத்)தனம்: -

எவரொருவர் அல்லாஹ்வுக்கு முற்றிலும் கீழ்ப்படிந்த நிலையில் மறுமைநாளில் அவனைச் சந்திக்க விரும்புகின்றாரோ அவர் – ஐவேளைத் தொழுகைகளை மிகவும் பேணுதலுடன் கடைப்பிடிக்க வேண்டும். அவற்றைப் பள்ளியில் சென்று ஜமாஅத்துடன் நிறைவேற்ற வேண்டும். ஏனென்றால் அல்லாஹ் உங்களின் தூதருக்கு ‘சுன்னத்துல் ஹுதா’வைக் கற்றுத் தந்துள்ளான். இத்தொழுகைகள்யாவும் அதனைச் சார்ந்தவைதாம். நயவஞ்சகர்கள் தம் தொழுகைகளை வீட்டில் இருந்துகொண்டு நிறைவேற்றுவது போல் நீங்களும் வீட்டில் இருந்தவாறே தொழுகைகளை நிறைவேற்றுவீர்களாயின் நீங்கள் திருத்தூதர் (ஸல்) அவர்களின் வழிமுறையை விட்டுவிட்டால் நேரிய வழியை (ஸிராத்துல் முஸ்தகீமை) விட்டவர்களாகின்றீர்கள். ஆதாரம் :முஸ்லிம்.

தக்க காரணமின்றி ஜமாத் தொழுகையை விட்டுவிட்டால் அவனின் தொழுகை மறுமையில் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது: -

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் ‘ஒருவன், முஅத்தின் (பாங்கு சொல்பவர் ) தொழுகைக்காக விடுக்கம் அழைப்பினைச் செவியேற்றதும் – அதன்பக்கம் விரைந்து வருவதிலிருந்து தடுக்கும் காரணம் எதுவுமில்லையானால், தனித்து நின்று நிறைவேற்றப்படும் அவனின் தொழுகை (மறுமைநாளில்) ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.’

அப்போது தோழர்கள் பெருமானார் (ஸல்) அவர்களிடம், ‘காரணம் என்று கூறினீர்களே, அது என்ன? எவை எவை காரணங்களாக அமைய முடியும்?’ என வினவ, ‘அச்சமும் நோயும் தாம்!’ என்று பெருமானார் (ஸல்) விடை பகர்ந்தார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), ஆதாரம் : அபூதாவூத்

ஜமாஅத்தாக தொழுவதின் சிறப்புகள்: -

ஜமாஅத் தொழுகை தனியாக தொழுவதை விட இருப்பத்தி ஐந்து மடங்கு சிறந்தது. மேலும் வானவர்களும் ஜமாத் தொழுகைக்காக செல்பவர்களுக்காக பிரார்த்திக்கின்றனர்: -

“ஒருவர் தம் வீட்டில் அல்லது கடை வீதியில் தொழுவதை விட ஜமாஅத்துடன் தொழுவது இருபத்தி ஐந்து மடங்கு சிறந்ததாக இருக்கிறது. அதாவது, ஒருவர் உளூச் செய்து, அதை அழகாகவும் செய்து, பின்னர் தொழ வேண்டுமென்ற எண்ணத்திலேயே பள்ளிவாசலுக்குப் புறப்பட்டால் அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடிக்கும் அல்லாஹ் ஓர் அந்தஸ்தை உயர்த்துகிறான். ஒரு பாவத்தை அழிக்கிறான். அவர் தொழுமிடத்தில் அவருக்காக வானவர்கள் பிரார்த்திக்கின்றனர். தங்கள் பிரார்த்தனையில் ‘இறைவா! நீ இந்த மனிதனின் மீது அருள் புரிவாயாக! உன்னுடைய கருணையை அவருக்குச் சொரிவாயாக!’ என்றும் கூறுவார்கள். உங்களில் ஒருவர் தொழுகையை எதிர்பார்த்திருக்கும் போதெல்லாம் அவர் தொழுகையிலேயே இருக்கிறார்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி), ஆதாரம் : புகாரி.

ஜமாஅத்தாக தொழுபவரின் ஈமான் செழித்தோங்குகிறது: -

பெருமானார் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் ‘ஒருவன் தனித்து நின்று நிறைவேற்றும் தொழுகையைவிட மற்றொருவனுடன் சேர்ந்து நிறைவேற்றம் தொழுகை ஈமானின் வளப்பத்திற்கும் முன்னேற்றதிற்கும் காரணமாகின்றது. மேலும், ஒருவருடன் சேர்ந்து அவர் நிறைவேற்றும் தொழுகையைவிட இருவருடன் சேர்ந்து நிறைவேற்றும் தொழுகை மென்மேலும் ஈமான் செழித்தோங்கக் காரணமாகின்றது. இன்னும் எத்தனை அதிகப் பேருடன் மக்கள் தொழுகையை நிறைவேற்றுகின்றார்களோ அல்லாஹ்விடத்தில் அது மிகவும் உதந்ததாகும். (அந்த அளவு அல்லாஹ்வுடன் தொடர்பு வலுப்பெறும்.) அறிவிப்பவர்: உபைபின் கஅப் (ரலி), ஆதாரம் : அபூதாவூது

ஜமாஅத் தொழுகைக்காக நீண்ட தூரம் நடந்து வருபவர்களுக்கு அதிக நன்மையுள்ளது: -

‘யார் நீண்ட தூரத்திலிருந்து நடந்து தொழுகைக்கு வருகிறார்களோ அவர்களுக்கு மற்ற எல்லோரையும் விட அதிகம் நன்மை உண்டு. ஜமாஅத் தொழுகையை எதிர்பார்த்திருந்து இமாமுடன் தொழுகிறவருக்குத் தனியாகத் தொழுதுவிட்டுத் தூங்கி விடுபவரை விட அதிகம் நன்மையுண்டு’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என அபூ மூஸா(ரலி) அறிவித்தார். ஆதாரம் : புகாரி.

பஜ்ர் மற்றும் இஷா தொழுகைகளை ஜமாஅத்தாக தொழுவதின் சிறப்புகள்: -

நம்முடைய சகோதரர்களில் சிலர் பள்ளிவாசலுக்கு சென்று தொழுதாலும் இஷா மற்றும் பஜ்ர் தொழுகை நேரங்களில் பள்ளிக்கு வருவதற்கு அலட்சியமாக இருந்து விடுகின்றனர். அதிலும் குறிப்பாக பஜருடைய தொழுகையில் பள்ளியில் எண்ணிக்கை மிக சொற்பமாகவே காணப்படுகின்றது.

தவழ்ந்தாவது பள்ளிக்கு வருவார்கள்: -

“தொழுகையை ஆரம்ப நேரத்தில் தொழுவதன் சிறப்பை மக்கள் அறிவார்களானால் அதற்காக விரைந்து செல்வார்கள். ஸுப்ஹ் தொழுகையிலும் அதமா(இஷா)த் தொழுகையிலும் உள்ள நன்மையை அறிவார்களானால் தவழ்ந்தாவது (ஜமாஅத்) தொழுகைக்கு வந்து சேர்ந்து விடுவர்.” என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அபூ ஹுரைரா(ரலி) அபூ ஹுரைரா(ரலி), ஆதாரம் : புகாரி.

Thursday, October 13, 2011

வெற்றி பெற செய்வோம் ஊர் பொது வேட்பாளர் சகோதரி.மெகர்பானுவை

இறைவனின் திருப்பெயரால்...

வெற்றி பெற செய்வோம் ஊர் பொது வேட்பாளர் சகோதரி.மெகர்பானுவை...



அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...

அன்பார்ந்த கீழக்கரை சகோதரர்களே! சகோதரிகளே! நம் அனைவருக்கும் இப்போது பெரும் பொறுப்பு வந்துள்ளது... இங்கு எதை நான் குறிப்பிடுகின்றேன் என்றால் நமது ஊர் சேர்மன் தேர்தலை பற்றி தான். அல்லாஹ்வுடைய பெரும் கிருபையை கொண்டு ஊரில் உள்ள ஜமாத் பெரியவர்கள்; மற்றும் நம் செந்தங்களான மற்ற மத அமைப்ப...ு பெரியவர்கள் அனைவரும் ஒர் பள்ளிவாசலில் ஒன்று கூடினார். ஏன்? இன்று நமது ஊரில் இருக்கும் அடிப்படை பிரச்சனையான குப்பையில் இருந்து மற்ற அத்தனை பிரச்சனையையும் நிவர்த்தி செய்ய முடியாமலும் திரண்பட நிர்வகிக்காமல் விட்ட நகராட்சி சேர்மன் மற்றும் நிர்வாக அதிகாரிகள் சீர்கேட்டை ஒழிக்க வேண்டும். இனியாவது வரும் நகராட்சி சேர்மன்; ஊர் நலனில் அக்கரை உள்ளவராக ஒருவரை நாம் தேர்ந்து எடுக்க வேண்டும் என்ற ஆவலில் ஊர் பெரியவர்கள் நமது ஊர் நலன் கருதி ஓரு பொது வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும் என்று கூட்டத்தை கூட்டினார்கள். ஆக்கூட்டத்தில் ஊர் பெரியவர்களின் கட்டுப்பாட்டில் ஊர் நலன் கருதி மட்டும் பணிசெய்யும் ஒரு சேர்மனை தேர்தெடுக்க வேண்டும் என்ற முடிவில் பள்ளிவாசலில் பல கூட்டங்கள் கூட்டி விருப்பமனு கொடுத்தவர்களை பரிசீலனை செய்து தகுதிவாய்ந்த ஒருவர் யார் என்று இந்த குழுவினர் தேர்ந்தெடுத்தனர். மேலும் மனிதநேய மக்கள் கட்சியின் தலைமையும் மற்றும் ஊர் நிர்வாகிகளும் மிகவும் ஆவளாக கட்சி சார்பில் பேட்டியிடுவதற்கு வேட்பாளரை பரிசீலித்து வைத்திருந்தும் ஆனால் கீழக்கரையில் உள்ள ஜமாத் பெரியவர்கள்; மற்றும் மற்ற மத அமைப்பு பெரியவர்கள் ஒன்று கூடி ஊர் நலன் கருதி மட்டும் பணிசெய்யும் ஒரு சேர்மன் வேட்பாளரை தேர்தெடுத்த செய்தி அறிந்தவுடன் அந்த நல்ல நோக்கத்தை ஆதரிக்க வேண்டும் என்ற காரணத்தினால் மனிதநேய மக்கள் கட்சி தலைமை கீழக்கரையில் தனி வேட்பாளர் நிறுத்தாமல் கீழக்கரை ஜமாத் பொது வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்தார்கள். இவ்வாறு இந்த பொது வேட்பாளர் வெற்றி பெற்று நமது ஊருக்கு கிடைக்கும் நலன்கள் பற்றி அறிந்த அனைத்து சமுகத்தினரும் ஆதரவு தெருவித்து வருகின்றனர். பரவலாக கீழக்கரை ஜமாத் பொது வேட்பாளர் செல்லும் இடமெல்லாம்; மக்கள் தங்கள் ஆதரவை வெளிப்படையாக தெருவித்து வருகின்றனர். வெளிநாட்டில் இருக்கும் நாம் நமது ஊர் நலனில் அக்கரை கொண்டு நாமும் இந்த பொது வேட்பாளர் என்ற ஒரு மெகா முயற்சியில் ஈடுபட்ட குழுவில் நமது பங்களிப்பு செய்ய வேண்டும். அதற்காக நாம் நமது குடும்பத்தார்கள் மற்றும் நண்பர்களிடம் தொடர்பு கொண்டு ஊர் பொது வேட்பாளர் சகோதரி.மெகர்பானுக்கு கை கடிகார சின்னத்தில் வாக்களியுங்கள் என்று வலியுறுத்த வேண்டும். ஊர் பொது வேட்பாளர் சகோதரி.மெகர்பானு வெற்றி பெற உங்கள் தொழுகையிலும் இறைவனிடம் துவா செய்யுங்கள்...
நாம் வாக்களிக்க வேண்டிய சின்னம் கை கடிகாரம்...

நமது ஊர் பொது வேட்பாளர் சின்னம் கை கடிகாரம்...

நமது ஊர் ஒற்றுமையை காக்க வந்த சின்னம் கை கடிகாரம்...

நமது ஊரில் இருந்து அரசியல் கொள்ளையர்களை விரட்டும் சின்னம் கை கடிகாரம்...

நமது ஊரில் மாற்று அரசியலின் அடையாளச் சின்னம் கை கடிகாரம்...

நமது ஊரில் உள்ள குப்பைகளை சுத்தம் செய்ய வந்த சின்னம் கை கடிகாரம்...

மக்களால் தேர்ந்தெடுக்க பட்ட வேட்பாளர் சின்னம் கை கடிகாரம்...

நமது சகோதரி மெகர்பானுவின் சின்னம் கை கடிகாரம்... கீழக்கரை சமூக ஆதரவாளரின் சின்னம் கை கடிகாரம்...

மனிதநேய மக்கள் கட்சியின் ஆதரவு பெற்ற சின்னம் கை கடிகாரம்...

நாம் ஆதரிக்கும் சின்னம் கை கடிகாரம்...

நாம் ஆதரிக்க சொல்லும் சின்னம் கை கடிகாரம்... கை கடிகாரம்...

தொகுப்பு

கீழை.இர்பான்
செயலாளர்
தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் -  அபுதாபி

http://www.tmmkuae.tk/

Tuesday, October 4, 2011

தொழுகையை விடுவது மிகப்பெரிய பாவமாகும்!

“நம்பிக்கை கொண்டோர் மீது தொழுகையானது நேரம் குறிக்கப்பட்ட கடமையாகவுள்ளது” (அல்-குர்ஆன் 4:103)


ஆனால், இவர்களுக்குப் பின் (வழி கெட்ட) சந்ததியினர் இவர்களுடைய இடத்திற்கு வந்தார்கள்; அவர்கள் தொழுகையை வீணாக்கினார்கள்; (இழிவான மன)இச்சைகளைப் பின்பற்றினார்கள்; (மறுமையில்) அவர்கள் (நரகத்தின்) கேட்டைச் சந்திப்பார்கள். (அல்-குர்ஆன் 19:59)

தவ்பா செய்து, (பாவங்களிலிருந்து விலகி) ஈமான் கொண்டு, (ஸாலிஹான) – நல்ல – செயல்களைச் செய்கிறார்களே அவர்களைத் தவிர; அத்தகைய (ஸாலிஹான)வர்கள்; (ஜன்னத்தில்) – சுவர்க்கத்தில் பிரவேசிப்பார்கள்; (அவர்கள் அடைய வேண்டிய நற்பயன்) எதிலும் அவர்களுக்குக் குறைவு செய்யப்பட மாட்டாது. ” (அல்-குர்ஆன் 19:60)

இன்னும், (கவனமற்ற) தொழுகையாளிகளுக்குக் கேடுதான். அவர்கள் எத்தகையோர் என்றால் தம் தொழுகையில் பராமுகமாக(வும், அசிரத்தையாக)வும் இருப்போர். ” (அல்-குர்ஆன் 107:4-5)

ஈமான் கொண்டவர்களே! உங்கள் செல்வமும், உங்களுடைய மக்களும், அல்லாஹ்வின் நினைப்பை விட்டும் உங்களைப் பராமுகமாக்கிவிட வேண்டாம் – எவர் இவ்வாறு செய்கிறாரோ நிச்சயமாக அவர்கள்தாம் நஷ்டமடைந்தவர்கள். (அல்-குர்ஆன் 63:9)


குர்ஆன் விரிவுரையாளர்கள் மேற்கண்ட வசனங்களுக்கு விளக்கமளிக்கையில், பின்வருமாறு கூறினார்கள்.

இறைவனை நினைவு கூர்தல் என்று கூறப்பட்ட மேற்கூறிய வசனத்திற்கு ஐந்து நேரத் தொழுகையைக் குறிக்கிறது. யாராவது ஒருவர் கொடுக்கல் வாங்கல், தன்னுடைய குடும்பத்தினருக்காக சம்பாதிப்பது அல்லது தன்னுடைய குழந்தைகளுடன் இருப்பது போன்ற காரியங்களுக்காக தொழுகையை விட்டுவிடுவாரானால் அவர் நஷ்டத்திற்கு உள்ளானவராவார்.

மறுமையில் முதல் விசாரனை தொழுகையைப் பற்றியதாகும்: -

அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார்கள்: -

நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: மறுமையில் ஒரு மனிதனின் அமல்களைப் பற்றி விசாரிக்கப் படும்போது தொழுகையைப் பற்றியே முதன் முதலாக விசாரிக்கப்படும். அது சீராக அமைந்து விடுமேயானால் ஏனைய அனைத்து வணக்க வழிபாடுகளும் சீராகவே அமையும். அது சீராகவில்லையென்றால் ஏனைய அனைத்தும் சீரற்றதாகவே இருக்கும். (ஆதாரம்: ஸுனன் அபூதாவுத்)

நரக வாசிகளைப் பற்றிக் குறிப்பிடும் போது அல்லாஹ் கூறுகிறான்: -

‘உங்களை ஸகர் (நரகத்தில்) நுழைய வைத்தது எது?’ (என்று கேட்பார்கள்.) அவர்கள் (பதில்) கூறுவார்கள்: ‘தொழுபவர்களில் நின்றும் நாங்கள் இருக்கவில்லை. ‘அன்றியும், ஏழைகளுக்கு நாங்கள் உணவும் அளிக்கவில்லை. ‘(வீணானவற்றில்) மூழ்கிக்கிடந்தோருடன், நாங்களும் மூழ்கிக்கிடந்தோம். ‘இந்த நியாயத் தீர்ப்பு நாளை நாங்கள் பொய்யாக்கிக் கொண்டும் இருந்தோம். ‘உறுதியான (மரணம்) எங்களிடம் வரும்வரையில் (இவ்வாறாக இருந்தோம்’ எனக் கூறுவர்). (அல்-குர்ஆன் 74:42-47)

தொழுகையை விடுவது இறை நிராகரிப்பு: -

அல்லாஹ் கூறுகிறான்: -

நீங்கள் அவன் பக்கமே திரும்பியவர்களாக இருங்கள்; அவனிடம் பயபக்தியுடன் நடந்து கொள்ளுங்கள்; தொழுகையையும் நிலை நிறுத்துங்கள்; இன்னும் இணைவைப்போரில் நீங்களும் ஆகி விடாதீர்கள். (அல்குர்ஆன் 30:31)

நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: -

ஒரு முஸ்லிமுக்கும் இணைவைத்தலுக்கும், இறை நிராகரிப்புக்கும் இடையில் உள்ள வேறுபாடு தொழுகையை விடுவது தான். (ஆதாரம்: முஸ்லிம்)

முஸ்லிமுக்கும் காஃபிருக்கும் இடையே உள்ள உடன்படிக்கையே தொழுகை தான். அதனை எவன் விட்டு விடுகின்றானோ அவன் காஃபிராகி விட்டான். (ஆதாரம்: அஹ்மத் , திர்மிதி)

தொழுகையைத்தவிர மார்க்க விஷயத்தில் எதை விடுவதினாலும் ஒருவன் காஃபிராகிவிடுவான் என்று நபித்தோழர்கள் கருதவில்லை. (ஆதாரம்: திர்மிதி)

“நிராகரிப்புக்கும் இஸ்லாத்திற்கும் இடையேயுள்ள வித்தியாசம் தொழுகையே. எவன் அதனை விடுகின்றானோ நிராகரித்தவனாகின்றான்” (ஆதாரம்: இப்னு ஹிப்பான்)

அபூ தர்தா (ரலி) அவர்கள் கூறினார்கள்: ”எவனிடம் தொழுகை இல்லையோ அவனிடம் ஈமான் இல்லை”

தொழுகையைத்தவிர மார்க்க விஷயத்தில் எதை விடுவதினாலும் ஒருவன் காஃபிராகிவிடுவான் என்று நபித்தோழர்கள் கருதவில்லை. ஆதாரம்: திர்மிதி


தொழாதவர்களின் நோன்பு, தர்மம் போன்ற நற்செயல்கள் ஏற்றுக்கொள்ளப்படாது: -

“அவர்களுடைய தானங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது என்று (அல்லாஹ்) தடுத்திருப்பதற்குக் காரணம் யாதெனில்; அவர்கள் அல்லாஹ்வையும், அவன் தூதரையும் நிராகரித்தார்கள்; மேலும் மிகச் சடைந்தவர்களாகவேயன்றி தொழுகைக்கு அவர்கள் வருவதில்லை. இன்னும் அவர்கள் வெறுப்புடனேயன்றி தானங்கள் செய்வதில்லை” (அல் குர்ஆன் 9:54)

யார் ஒருவர் வேண்டுமென்றே தொழுகையை விட்டுவிடுகிறாரோ அவர் அல்லாஹ்விடத்திலே எதையும் அடைய இயலாது (இப்னுமாஜா)

தொழுகையை நிலைநாட்டுபவர்கள் மட்டுமே மார்க்கத்தில் சகோதரர்கள்: -

‘அவர்கள் தவ்பாச் செய்து (திருந்தி), தொழுகையை நிலைநாட்டி, ஜக்காத்தும் கொடுத்தால் அவர்கள், மார்க்கத்தில் உங்கள் சகோதரர்களே’ (அல்-குர்ஆன் 9:11)

‘மனிதர்கள், வணக்கத்திற்குத் தகுதியானவன் அல்லாஹ்வையன்றி வேறுயாருமில்லை; முஹம்மத் இறைத்தூதர் என்று உறுதியாக நம்பி, தொழுகையை நிலை நிறுத்தி, ஸகாத்தும் கொடுக்கும் வரை அவர்களுடன் போரிட வேண்டும் என்று நான் கட்டளையிடப்பட்டுள்ளேன். இவற்றை அவர்கள் செய்து விடுவார்களானால் தம் உயிர், உடைமைகளை என்னிடமிருந்து பாதுகாத்துக் கொள்வார்கள். இஸ்லாத்தின் வேறு உரிமைகளில் (அவர்கள் வரம்பு மீறனாலே) தவிர! மேலும் அவர்களின் விசாரணை இறைவனிடமே உள்ளது’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். (ஆதாரம்: புகாரி)

கருணையாளனாகிய அல்லாஹ் நம் குற்றங்களை மன்னித்து முஸ்லிமான நம் அனைவைரயும் தொழுகையை முறைப்படி பேணி நடப்பவர்களாக ஆக்கியருள்வானாகவும்.

Tuesday, August 16, 2011

சரித்திரம் படைத்த அபுதாபி தமுமுக இஃப்தார் நிகழ்ச்சி

சரித்திரம் படைத்த அபுதாபி தமுமுக இஃப்தார் நிகழ்ச்சி ஐக்கிய அரபு அமீரகம் அபுதாபி மண்டலம் தமுமுக சார்பாக கடந்த 13-08-2011 சனிக் கிழமை அன்று கேரளா ஷோசியல் சென்டரில் இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.சனையா கிளைத்தலைவர் வாலிநோக்கம் பீர் முகம்மது திருமறைக் குர்ஆன் வசனங்களை ஓதி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். அபுதாபி மண்டல நிர்வாகி அபுல் ஹசன் வரவேற்புரை நிகழ்த்தினார்


அபுதாபி மண்டலம் தமுமுக செயலாளர் கீழை இர்பான் தலைமையில் நடை பெற்ற இந்நிகழ்ச்சியில் ஐக்கிய அரபு அமீரக தமுமுக நிர்வாகிகள் மற்றும் அபுதாபி தாயிகள் மவ்லவி.ஹிதாயதுல்லாஹ் நூரி, மவ்லவி. இக்பால் உமரி, அமீர் சுல்தான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஐக்கிய அரபு அமீரக தமுமுக தலைவர் அப்துல் ஹாதி வணக்கங்களை அதிகரிப்போம் என்ற தலைப்பில் துவக்கவுரை நிகழ்த்தினார்.


தாயகத்திலிருந்து வந்திருந்த தமுமுக தலைமைக்கழகப் பேச்சாளர் கோவை ஜெய்னுல் ஆப்தீன் நபி வழியே நம் வழி என்ற தலைப்பிலும் தமுமுக மாநில உலமா அணிச் செயலாளர் மவ்லவி.யூசுப் எஸ்.பி. இயக்கமாய் செயல்படுவோம் என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார். தாயகத்தில் நடக்கும் தமுமுகவின் செயல்பாடுகளை பற்றி அபுதாபி மண்டலம் தமுமுக தலைவர் பொதக்குடி.தாஜுதீன் விளக்கவுரை நிகழ்த்தினார். சனையா கிளைச் செயலாளர் மண்டபம் அப்துல் ரஹ்மான் நன்றியுரை நிகழ்த்தினார்.

நிகழ்ச்சியின் சிறப்புகள்

• வேலை நாளில் நடத்தப் பட்டது.
• அனைத்து சகோதர அமைப்புகளுக்கும் அழைப்புவிடபட்டது
• வெப்பத்தையும் பொருட்;படுத்தாமல் தமுமுக நிகழ்ச்சிக்காக மக்கள் திரண்டனர்
• பிரதான சாலையிலிருந்து அரங்கம் வரை நமது சீருடையில் வரவேற்பு குழவினர்
• தமுமுக வின் கலங்கரை விளக்கம் புகைப்பட கண்காட்சிகள்
• அரங்க முழுவதும் கண்கவர் தமுமுகவின் பேனர்கள்
• நோன்பு துறப்புக்காக மிகசிறப்பான உயர்தர உணவு ஏற்பாடுகள்

தொழில் அதிபர்கள், அனைத்து சகோதர அமைப்பை சேர்ந்தவர்கள் மற்றும் அபுதாபி வாழ் தமிழ் மக்களும் 300க்கு அதிகமானோர் திரளாக கலந்து கொண்டு பயன் பெற்றனர்.


நிகழ்ச்சி ஏற்பாடுகளை ரசுல், முகவை இஸ்மாயில், இம்ரான், உஸ்மான், நாசர், மவ்லவி இஸ்மாயில்ஷா, சுஜாவுதீன், மொய்தீன், சலீம், சாதிக், ஹாஜா, சர்ஃபுதீன், முஸ்தாக், சரவணன் மற்றும் ஸ்டிஃபன் ஆகிய குழுவினர் 10 தினங்களாக கடுமையாக பணி செய்து மக்களை அழைத்தனர்.

நிகழ்ச்சியின் இறுதியில் குறை நிறைகள் கேட்டறியப்பட்டன எழுச்சியுடன் நடைபெற்ற இந்நிகழ்ச்சி துவா ஓதி நிறைவுற்றது.

அல்ஹம்துலில்லாஹ்!

Sunday, July 31, 2011

(இப்தார்) ரமலான் சிறப்பு நிகழ்ச்சி - த.மு.மு.க - அபுதாபி மண்டலம்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் அபுதாபி மண்டலம் சார்பாக இன்ஷா அல்லாஹ் வரும் 13.08.2011 (சனிக்கிழமை), அன்று மாலை 5 மணிக்கு (இப்தார்) ரமலான் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அனைவரும் தவறாது கலந்து கொள்ளவும்.


Saturday, March 12, 2011

அபுதாபி மண்டல இரத்த தானம் முகாம்

தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் உலக முழுக்க இரத்த தானம் செய்யும் தமிழ் அமைப்புகளில் முன்னோடியாக திகழ்கிறது எல்லாப்புகழும் இறைவனுக்கே (அல்ஹம்துலில்லாஹ்), அதன் தொடர்ச்சியாக 11.03.2011 அன்று வளைகுடா நாடான அமீரகத்தில் அபுதாபி மண்டல த.மு.மு.க சார்பாக சனயா 17 பகுதி E.T.A Melco கேம்ப் முன்பாக சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றது.
இரத்த தானமுகாமில் இந்தியா மற்றும் அண்டை நாடு சகோதர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர். முகாம் குறுகிய நேரத்தில் நடைபெற்றது. சுமார் 70 மேற்பட்ட சகோதர்கள் இரத்த தானம் செய்தனர். எல்லா புகழும் இறைவனுக்கே (அல்ஹம்துலில்லாஹ்)!

நிகழ்ச்சி ஏற்பாட்டை சனயா த.மு.மு.க பகுதி நிர்வாகிகள் மேலப்பாளையம் இம்ரான், மண்டபம் அப்துல் ரஹ்மான், உடன்குடி முபாரக், கீழை பசீர், பாதுஷா, ரசாக், ஜாகிர் மற்றும் சாகுல் ஹமீது சிறப்பான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.

பாராட்டு சான்றிதழ்

சென்னைக்கு முந்திய வரலாற்றில் தமிழக மக்களுக்கு கல்வியையும் நாகரிகத்தையும் கற்று தந்து மதரஸா (பள்ளிகூடங்கள்) நகரமாக திகழ்ந்த மதராஸில் (சென்னையில்)வடமரைக்காயர் என்ற கடற்கரை பகுதியில் மனித நேயத்தின் கலங்கரை விளக்காக சுடர் விட்டுக்கொண்டிருக்கும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகத்தின் ஒரு ஒளியாக செயல்பட்டு வரும் அபுதாபி மண்டல முஸ்லிம் முன்னேற்ற கழகத்திற்கு அபுதாபி ஷேக் கலிபா மெடிக்கல் சென்டர் இரத்த தான முகாம் நடத்தியதற்காக பாராட்டு சான்றிதழை வழங்கியுள்ளது.

எல்லாப்புகழும் இறைவனுக்கே.... (அல்ஹம்துலில்லாஹ்)

கடந்த ஆண்டுகளிலும் இது போன்ற சான்றிதழ்களை அபுதாபி மண்டல முஸ்லிம் முன்னேற்ற கழகம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடல் கடந்தாலும் மனித நேயப்பணிகளை முழுமையாக செய்து வாழும் பண்பு உள்ளவர்கள் த.மு.மு.க வினர் என்பதை இது போன்ற பல பாராட்டுகள் எடுத்துக்காட்டுகிறது.

எல்லாப்புகழும் இறைவனுக்கே ....(அல்ஹம்துலில்லாஹ்)


செய்தி தொகுப்பு: கீழை இர்பான்.